கனடா நாட்டில் உபெர் டாக்ஸியில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடம் ஓட்டுனர் அத்துமீறி செயல்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொறொன்ரோ நகரை சேர்ந்த Erika Szabo(28) என்ற இளம்பெண் கடந்த ஞாயிறு அன்று வெளியே சென்று விட்டு உபெர் கால் டாக்ஸியில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
காரில் ஏறியவுடன் ‘சார்ஜ் இல்லாத காரணத்தினால் எனது மொபைல் செயல்படவில்லை’ என ஓட்டுனரிடம் கூறியுள்ளார்.
அப்போது, ‘மொபைல் வேலை செய்யவில்லை என்றால் டாக்ஸிக்கான கட்டணத்தை செலுத்த முடியாது’ என பதிலளித்துள்ளார்.
‘அப்படியானால் உடனே வாகனத்தை நிறுத்துங்கள் நான் இறங்கிக்கொள்கிறேன்’ என இளம்பென் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
‘கட்டணம் கொடுக்க தேவையில்லை. இதற்கு பதிலாக இரண்டு வழிகள் உள்ளது’ என ஓட்டுனர் கூறியுள்ளார்.
’ஒன்று, உங்களுடைய உடலை நிர்வாணமாக காட்ட வேண்டும் அல்லது பாலியல் ரீதியாக என்னை இன்பத்தில் ஆழ்த்த வேண்டும்’ என ஓட்டுனர் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட இளம்பெண் ‘ஓட்டுனர் நகைச்சுவைக்காக தான் கூறுகிறார்’ என நினைத்து பதில் எதுவும் கூறவில்லை.
ஆனால், சிறிது தூரம் சென்ற ஓட்டுனர் திடீரென காரை நிறுத்தி விட்டு ‘கட்டணம் கொடுக்க முடியாது என்றால் என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும்’ என மிரட்டல் வார்த்தைகளில் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் ‘பணத்தை கொடுத்து விடுகிறேன்’ எனக் கூறிவிட்டு வீடு வரும் வரை பீதியில் ஆழ்ந்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பியதும் மொபைலை சார்ஜ் செய்து ஓட்டுனரின் கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியில் ஆழ்ந்த இளம்பெண் உடனடியாக உபெர் நிறுவனத்தை தொடர்புக்கொண்டு புகார் அளித்துள்ளார்.
ஓட்டுனரின் நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரிய நிறுவனம் இளம்பெண் செலுத்திய 12 டொலரை திருப்பி செலுத்தியுள்ளது.
எனினும், நிறுவனத்தின் நடவடிக்கையால் திருப்தி அடையாத அப்பெண் பொலிசாரிடம் புகார் பதிவு செய்ததை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.