வட மாகாண சபையின் புதிய பிரதி அவைத் தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கான வாக்கெடுப்பு இன்று வடமாகாண சபையில் இடம்பெற்றதோடு, 18 பெரும்பான்மை வாக்குகளால் இவர் தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பிரதி அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட வல்லிபுரம் கமலேஸ்வரன் வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் பெற்று தனக்கான ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு இன்று இடம்பெற்ற போது, பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக வட மாகாண சபை உறுப்பினரான வல்லிபுரம் கமலேஸ்வரனை நியமிக்குமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் அவையில் தெரிவித்தார்.
எனினும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை பிரதி அவைத் தலைவராகத் தெரிவுசெய்யுமாறு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது சபையில் குழப்பநிலை எழுந்ததைத் தொடர்ந்து வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், தேநீர் இடைவேளையின் பின்னர் பிரதி அவைத் தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வடமாகாண சபை உறுப்பினரான வல்லிபுரம் கமலேஸ்வரன் 18 வாக்குகளையும், அனந்தி சசிதரன் 13 வாக்குகளையும், நடுநிலையாக 1 வாக்குகள் பதிவாகியதை அடுத்து வல்லிபுரம் கமலேஸ்வரன் வடமாகாண பிரதி அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இது இவ்வாறு இருக்க வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவராக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேரந்த ஒருவர் தெரிவு செய்யப்படவிருத்த இடத்து வெளிநாட்டிலிருந்து இவ்விடயத்தை அறிந்து கொண்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தான் வரும்வரை பொறுமை காக்கும்படி குறிப்பிட்டிருந்த போதிலும் அல்லது பிரதி அவைத்தலைவர் தான் தெரிவு செய்யும் ஒருவரை நியமிக்கப்படவேண்டும் என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டும் தொலை நகல் மூலம் பிரதி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அவருடைய கடிதத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத வடமாகாணசபையின் அவைத்தலைவரின் முடிவுகளுக்கு அமைய ஒட்டுமொத்த மாகாணசபையினரும் இணைந்து முதலமைச்சரைப் புறந்தள்ளி பிரதி அவைத்தலைவர் வல்லிவுரம் கமலேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.