கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான ஒன்று கூடலும் தர்க்காலிக வழிஅனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் ச.சத்திய சீலன், போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலாஸ்பிள்ளை, கிளிநொச்சி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம கணக்காளர், போலிஸ் உத்தியோகத்தர்கள், வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பேரூந்து உரிமையாளர்கள் நீண்ட காலமாக தாம் எதிர்நோக்கும் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படுவதனையிட்டும், தற்காலிக வழி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியினை வெளிக்காட்டியதோடு அமைச்சர் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.
அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் இன்றைய நாள் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் என தெரிவித்ததோடு, போக்குவரத்தில் உள்ள பிரச்சனையை சீர் செய்ய தம்மால் எடுக்கப்படும் முயற்சிகளில் முதல் முயற்ச்சியாக அதிகாரசபை உருவாக்கப்பட்டதனை நினைவு கூர்ந்ததோடு, அதற்கு பலர் ஆதரவாகவும், மேலும் சிலர் இவ் அதிகாரசபை உருவாகக்கூடாது என்ற நோக்கில் செயல்பட்டதனையும் சுட்டிக்காட்டினார். மேலும் இவ்வளவு காலமும் போக்குவரத்துடன் தொடர்புபட்ட கடினமான பணியினை செய்துவந்த மாவட்ட செயலாளர், கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
மேலும் கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தை புதுப்பித்து அதற்கு தகுந்த நிருவாகத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்ததோடு இன்றையதினம் தற்காலிக அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதன் நோக்கமே அதுதான் எனவும் தெரிவித்ததோடு கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றைய மாவட்ட சங்கங்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக இன்று வழங்கப்படும் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் இந்தவருட இறுதிவரை செல்லுபடியாகும் எனவும் வருகின்ற தை மாதம் முதல் நிரந்தர அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கெல்லாம் அப்பால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்சனையாக இருப்பது, உரிமையாளர்கள் இல்லாத பலர் சங்கங்களில் இருந்து கொண்டு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகின்றார்கள். இப்பிரச்சனை இனம்காணப்பட்டுள்ளதுடன் அவை விரைவாக சீர்செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அரச சேவையில் உள்ளவர்கள் யாரும் இவ்வழி அனுமத்திப்பத்திரங்களை தம்வசம் வைத்திருக்க முடியாது எனவும் அவ்வாறு யாரேனும் வைத்திருப்பின் அவர்களுக்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததோடு. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அதிகாரசபைக்கான ஆளணி எடுக்கப்பட்டு அதிகாரசபை சிறப்பாக இயங்கும் எனவும் தெரிவித்தார்.