இரண்டாம் தரம் கற்கும் பிள்ளை ஒரு நிமிடத்தில் குறைந்தது 45 தொடக்கம் 60 சொற்கள் வரை வாசிக்க வேண்டும்

246

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆய்வரங்கம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தோம். இந்தியாவிலிருந்து வருகை தந்த ஆராய்ச்சியாளரொருவர் தான் ஆராய்ச்சி செய்த விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

எந்த மொழியைச் சேர்ந்தவராகவிருந்தாலும் இரண்டாம் தரம் படிக்கும் ஒரு சிறுவன் அல்லது சிறுமி ஆகக் குறைந்தது 45 தொடக்கம் 60 சொற்கள் வரை ஒரு நிமிடத்தில் வாசிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

தற்காலத்தில் எங்களுடைய மாணவர் சமுதாயத்தினர் மத்தியில் எத்தனை வீதமானோர் ஆர்வத்துடன் வாசிக்கின்றனர்? மிகவும் குறைந்தளவான மாணவர்களே வாசிப்பில் கவனம் செலுத்துகின்றனர் என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

மனித உன்னதத்தை நோக்கிய சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி முறைக் கண்காட்சி நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று யாழ். சன்மார்க்க வித்தியாலயத்தில் ஆரம்பமாகிய போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், அரசசார்பற்ற நிறுவனமொன்று வவுனியாவிலும், அனுராதபுரம் போன்ற சிங்களப் பகுதிகளிலும் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒரு நிமிடத்தில் எத்தனை சொற்களை வாசிக்கிறார்கள் என ஆய்வொன்றை மேற்கொண்டு முடிவை வெளியிட்டார்கள்.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற ஆய்வில் ஒரு நிமிடத்தில் சராசரியாக 39. 9 வீதமான சொற்களைத் தான் எங்களுடைய பிள்ளைகள் வாசிக்கிறார்கள் என அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தது.

அதேவேளை வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து ஆய்வு மேற்கொண்ட போது அங்குள்ள தரம்-02 மாணவர்கள் ஒருநிமிடத்தில் சராசரியாக 56 சொற்களை வாசிக்கிறார்கள்.

ஆகவே, இதிலிருந்து நாங்கள் வாசிப்பில் பின்தங்கிய நிலையில் காணப்படுவது புலப்படுகிறது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகள் எம்மத்தியில் அதிகரிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பெற்றோர்களும், எங்கள் சமூகமும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

தென்னிலங்கையில் இயங்கி வரும் சிங்கள மொழி தொலைக்காட்சி ஊடகங்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிப் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக்குகின்றன.

திரைப்படங்களை ஒளிபரப்புவதாகவிருந்தாலும் கூட இரவு-09 மணிக்குப் பின்னர் தான் அவர்கள் ஒளிபரப்புவார்கள். ஆனால், எங்களுடைய தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ நாடகங்கள், திரைப்படங்கள் போன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பாகுகின்றன.

பெற்றோர்களும், பிள்ளைகளும் இணைந்தே இவ்வாறான நிகழ்வுகளைக் காண்பதால் எங்களுடைய பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது.

ஆகவே, எங்களுடைய பிள்ளைகளின் அடிப்படைக் கல்வியிலேயே நாங்கள் தவறிழைப்பவர்களாகவுள்ளோம். இந்த நிலை மாற வேண்டும்.

சிறந்த வாசிப்புப் பழக்கம் இல்லையென்றால் ஒரு பிள்ளையால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை உணர வைக்க வேண்டியது எங்களுடைய கடமை எனவும் தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10

SHARE