மட்டக்குளி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பாதாள குழு மோதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடு ரொஷான் உட்பட பாதாள குழு உறுப்பினர்கள் 11 பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைப்பதற்கு முன்னர் அவர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டதில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனது தந்தையின் மரணம் தன் கண் முன் மேற்கொள்ளப்பட்டமையினால் குடு ரொஷான் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சூட்டி உக்குங் எனது தந்தையை என் கண் முன்னால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார். எனது தந்தை மகனே ஓடிச் சென்று உயிரை காப்பாற்றிக் கொள்… என என்னிடம் இறுதியாக கூறினார். இதனால் எனக்கு சூட்டி உக்குங் மீது கோபம் இருந்து..” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த கொலைக்கு பின்னால் பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்த செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறையிலுள்ள தெமட்டகொட சமிந்தவுடன் தொடர்பு கொண்ட குடு ரொஷான், மட்டக்குளி தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இந்த கொலைக்காக டீ-56 ரக துப்பாக்கி மற்றும் சாதாரண துப்பாக்கிகள் இரண்டினை பெற்றுக்கொள்ள உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
கடுவத ஆலயத்திற்கு அருகில் டீ-56 ரக துப்பாக்கியை கப்புவா என்பவரின் மருமகன் ஊடாக கொண்டு வந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாதாரண துப்பாக்கி இரண்டியை தெமட்டகொடையில் வைத்து ரொஷானின் குழுவினருக்கு அடையாளம் தெரியாத நபர்களினால் வழங்குவதற்கான நடவடிக்கை தெமட்டகொட சமிந்தவின் உத்தரவிற்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.