மட்டக்களப்பில் பல மில்லியன் செலவில் குளங்கள் இணைப்பு

212

மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்துள், உறுகாமம் குளங்களை இணைக்கின்ற வேலைத்திட்டத்தின் பூர்வாங்க ஆய்வுகள் யாவும் நிறைவு பெற்றுள்ள நிலையில், 2017 டிசம்பரில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

முந்தனை ஆறு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 24140.6 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கித்துள்,உறுகாமம் குளங்களை இணைக்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் இவ்வாறு கூறியுள்ளனர்.

மாவட்ட செயலகத்தில் கடந்தவாரம் நடைபெற்ற பிரான்ஸ் நாட்டு முகவராண்மை அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இன்று(02) இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பிரான்ஸ் நாட்டு முகவராண்மை அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பரன்ற் நசன்ஸ், தொழில்நுட்ப வல்லுனர் டேவிட் லற்றல் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் இக்கலந்துரையாடலில் பங்கு கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அசீஸ், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எந்திரி ஏ.எல்.ஜவ்பர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வன பரிபாலனத் திணைக்களம், கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கித்துள், உறுகாகம் குளங்களை இணைக்கின்ற வேலைத்திட்டத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பீடு தயாரிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்,சமூக பொருளாதார ஆய்வினை மத்திய நீர்ப்பாசன திணைக்களமும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளன. சாத்திய வள அறிக்கைக்குரிய ஆய்வுகளை பிரென்சு நிதியீட்ட முகவர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்திற்கு கிடைக்கின்ற நீரின் 80வீதம் வீணாக கடலுக்கு செல்வது தவிர்க்கப்படும். டிசம்பர் முதல் ஜனவரி காலப் பகுதியில் 900கனமீற்றர் நீர் இவ்வாறு கடலுக்கு செல்கிறது.

குறித்த திட்டம் மூலம் இந்த பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளலாம். அத்துடன் வறட்சி காலத்தில் நீர் விநியோகத்தினையும் மேற்கொள்ள முடியும் என்பது முக்கியமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2ஆவது பெரிய குளமாக கித்துள் உறுகாமம் குளம் அமையவுள்ளது. நெல் உற்பத்திக்கான சீரான நீர் விநியோகம் கிடைக்கும், உப உணவு உற்பத்தி அதிகரிக்கும், மற்றும் வெள்ளம், வரட்சியை குறைப்பதில் முக்கிய செல்வாக்கை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

இதன் மூலம் 7000 ஏக்கர் புதிய நிலங்களுக்கு நீர் விநியோகத்தினை மேற்கொள்ள முடிவதுடன், 8500 ஏக்கர் ஏற்கனவே பயன்படுத்திய விவசாய நிலத்திற்கும் நீர் விநியோகத்தினை சீராக மேற்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயத்துறை உற்பத்தித்திறன் அதிகரிப்பதுடன் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வருடந்தோறும் உபயோகம் இன்றி கடலுக்கு செல்லும் பெருமளவு நீரின் ஒரு பகுதி நீரையேனும் சேமிக்கும் பொருட்டு கடந்த பல வருடங்களாக உறுகாமம், கித்துள் ஆகிய குளங்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10 625-0-560-320-160-600-053-800-668-160-90-11 625-0-560-320-160-600-053-800-668-160-90-12

SHARE