யாழ்ப்பாணம் புங்குடுதீவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக வித்தியா என்ற பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு குறித்த உயர் பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய உயர் பொலிஸ் அதிகாரியை கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாக திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை விடுதலை செய்யுமாறு பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டதாக புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி வித்தியா கொலை செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் ஒருவரை பிரதேச மக்கள் பிடித்து கட்டியிருந்தனர் எனவும், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றின் மீது மக்கள் கல் வீசியிருந்தனர்.
சந்தேக நபர் பின்னர் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து மீளவும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.