மனைவியின் சடலத்தை 60 கிலோமீட்டர் சுமந்த கணவன்? இறுதிச் சடங்கை வெறுத்த உறவினர்கள்…

247

ஆம்புலன்ஸ் கட்டணத்துக்கு பணம் இல்லாததால் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியின் பிணத்தை 60 கிலோமீட்டர் தூரத்துக்கு தள்ளுவண்டியில் வைத்து எடுத்துவந்த பிச்சைக்காரரைப் பற்றிய தகவல் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள சங்காரெட்டி என்ற பகுதியின் அருகேயுள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் ஐதராபாத் நகரில் பிச்சை எடுத்து, பிழைத்து வந்தார்.

ஸ்ரீராமுலுவின் மனைவி கவிதாவும் தொழுநோயாளி. கணவருக்கு துணையாக பிச்சை எடுத்துவந்த கவிதா கடந்த வெள்ளிக்கிழமை இறந்துப் போனார். அவரது உடலை தனது சொந்த ஊரில் அடக்கம் செய்ய விரும்பிய ஸ்ரீராமுலு, ஆம்புலன்ஸ் டிரைவர்களை அணுகியபோது அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் வாடகை கேட்டுள்ளனர்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால், கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒரு தள்ளுவண்டியில் தொழுநோயாளியான மனைவியின் பிணத்தை கிடத்தி ஐதராபாத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விக்கராபாத் பகுதியை சனிக்கிழமை பிற்பகல் வந்தடைந்தார்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்களும், பொலிஸாரும் அவரது பரிதாப நிலையை கண்டு இரக்கப்பட்டு பண உதவி செய்து, கவிதாவின் பிரேதத்தை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி, ஸ்ரீராமுலுவின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தொழுநோயாளி என்பதால் ஸ்ரீராமுலுவின் சொந்த ஊரில் நடத்தப்பட்ட கவிதாவின் இறுதிச் சடங்கில் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல்கள் ஊடகங்களின் வாயிலாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் நாட்டில் இன்னும் நிலவிவரும் தீண்டாமை கொடுமை மற்றும் மனிதாபிமானமற்ற செயல்பாடுகளை அறிந்து சமூக ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.body

SHARE