மேற்கு அவுஸ்திரேலியாவில்தனது கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாமரி லியனகே, தான் வெளியில் வந்தபின்னர், தன்னை நாடு கடத்த வேண்டாம் என அந்நாட்டு குடிவரவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மருத்துவர் சாமரி லியனகே சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் கணவனை, கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் சுத்தியலால் அடித்துக்கொலை செய்துள்ளார்.
இதேவேளை குடும்ப வன்முறைக்குள்ளானவர் என்பதால் இக்கொலைக்கான குறைந்தபட்ச தண்டனையாக, 4 வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சாமரி லியனகே, நன்னடத்தை மற்றும் உறுதி மொழியின் அடிப்படையில் வெளியே வருவதற்காக செய்துள்ள மனு, அடுத்த வருட ஆரம்பத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஆனால் சாமரி லியனகேயின் விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், அவர் வெளியே வந்ததும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்.
எனினும் தனது பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, தன்னை நாடு கடத்த வேண்டாம் என குடிவரவு அமைச்சரிடம் சாமரி லியனகே கோரிக்கை விடுத்துள்ளார்.
சாமரி லியனகேயின் விசாவை மீண்டும் வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் மீளாய்வு நடைபெற்றுவருவதால் இவ்விடயம் குறித்து தற்போது கருத்துக்கூற முடியாதென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , சாமரி லியனகே மற்றும் அவருடைய கணவரும் மருத்துவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.