வீதி போக்குவரத்து குற்றங்களை குறைக்க வழிவகுக்கும் அபராதம்

235

24119303untitled-1

இலங்கையில் சுகாதாரப் பிரச்சினை என்பதையும் கடந்து பொதுப் பிரச்சினையாக வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்கள் வளர்ச்சியடைந்துள்ளன.

உலகின் பல நாடுகளில் வீதிப் போக்குவரத்து குற்றங்களும், வீதி விபத்துக்களும் வருடா வருடம் குறைந்து வருகின்ற இன்றைய சூழலில் எமது நாட்டில் அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

போக்குவரத்துப் பொலிஸாரின் பதிவுகளில், வீதி வாகனப் போக்குவரத்து விபத்துக்கள் காரணமாக வருடமொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைவதாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாளொன்றுக்கு 06 முதல் 08 பேர் வரை உயிரிழப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சு, வீதி வாகன விபத்துகளால் காயமடைவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வருடாந்தம் பெருந்தொகைப் பணத்தை செலவிட நேர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் கடந்த வருடம் (2015) மாத்திரம் செல்லுபடியான வாகன அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராகவும், மது அருந்திய நிலையில் வாகனத்தைச் செலுத்திய 49 ஆயிரம் பேரு-க்கு எதிராகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு இந்நாட்டுக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ள வீதி வாகனப் போக்குவரத்துக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதேயொழிய குறைந்ததாக இல்லை.

இது வளர்முக நாடான இலங்கைக்கு ஆரோக்கிய ரீதியாக மாத்திரமல்லாமல் சமூக பொருளாதார ரீதியாகவும் பெரும் பிரச்சினையாக விளங்குகின்றது.

இவ்வாறான பின்புலத்தில்தான் வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான வேலைத் திட்டத்தை முன்மொழிந்திருக்கின்றது நல்லாட்சி அரசாங்கம்.

வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் நேற்றுமுன்தினம் நிதியமைச்சில் விஷேட கூட்டமொன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, போக்குவரத்து பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை தொழிங்சங்கப் பிரதிநிதிகள் ஆகிய தரப்பினர் கலந்து கொண்டனர்.

வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இதனடிப்படையில் 07 வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது விடயத்தில் சகல தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்த இணக்கப்பாட்டின்படி,

மது அருந்திய நிலையில் வாகனத்தை செலுத்துதல்,

செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்துதல்,

செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரமற்ற நபருக்கு வாகனத்தை செலுத்த இடமளித்தல்,

அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல்,

வீதியில் இடது பக்கமாக முந்திச் செல்லுதல்,

ரயில் கடவைச் சட்டங்களை மீறுதல்,

காப்புறுதிச் சான்றிதழ் இன்றி வாகனத்தைச் செலுத்துதல்

ஆகிய ஏழு செயற்பாடுகளும் வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இக்குற்றங்களை இழைப்போருக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படவிருக்கின்றது.

அதேநேரம் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது,

‘வருமானம் ஈட்டும் நோக்கில் வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதம் இவ்வாறு அதிகரிக்கப்படவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துகளையும், உயிரிழப்புகளையும் கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

நாட்டு மக்களின் நலன்சகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். இந்நடவடிக்கையை நாட்டு மக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

உண்மையில் அரசாங்கம் அடையாளம் கண்டிருக்கும் இவ்வாறான செயற்பாடுகளால்தான் இந்நாட்டில் வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்கள் அதிகரித்து காணப்படிருக்கின்றன. இதில் ஐயமில்லை.

அதேநேரம் இக்குற்றங்களை துல்லியமாக உறுதிப்படுத்திக் கொள்ளவென பல நாடுகள் சி.சி.ரி.வி கமெராக்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதன் மூலம் பக்கச்சார்பு நடவடிக்கைகளையும், பாரபட்சங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதே அந்நாடுகளின் நம்பிக்கையாகும்.

அந்த வகையில் இந்நாட்டிலும் வீதிப் போக்குவரத்து கட்டமைப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்தும் போது வீதி போக்குவரத்து குற்றங்களை துல்லியமாக உறுதிப்படுத்தக் கூடியதாகவும், அபராதத்தை இலகுவாக விதிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அதிகம் நன்மை பயக்கும்.என்றாலும் இந்நாட்டில் முன்னொரு போதுமே இல்லாதபடி அதிகரித்துக் காணப்படும் வீதிப் போக்குவரத்துக் குற்றங்களை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அந்த வகையில் நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கை மூலம் வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்கள் குறைவடைய வழிவகுக்கும். அது நாட்டுக்கு நன்மைகள் பயக்கக் கூடியதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

SHARE