என் மகளை முதல்வர் விடுவிப்பார் – நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள்!

230

nalini2-25-1480021139

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியை முதல்வர் விடுதலை செய்வார் என நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யயப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நளினியும் ஒருவர்.

அந்த கொலையின் பின்னணி பற்றியும், வழக்கு விசாரணை குறித்தும், வேலூர் சிறையில் நடைபெற்ற நளினி-பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்தும் பரபரப்பான தகவல்கள் அடங்கிய நளினியின் சுயசரிதை புத்தகம் “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்” என்ற தலைப்பில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் தொகுத்துள்ள இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை வடபழனியில் நடந்தது.

புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, அதன் முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.

இந்த வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஓவியர் வீரசந்தானம், தியாகு, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள், கடந்த 26 ஆண்டுகளாக எனது மகள் நளினி சிறையில் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்.

என் மகள் நளினியை முதல்வர் விடுவிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

 

SHARE