சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு தஞ்சம் அளிக்க முடியாது என மறுத்த குடிமக்கள் தற்போது திடீரென தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Oberwil-Lieli என்ற பகுதி அந்நாட்டில் பணக்காரர்கள் அதிகளவில் வசிக்கும் கிராமம் ஆகும்.
சுவிஸில் வெளிநாட்டு புகலிட கோரிக்கையாளர்களுக்கு தஞ்சம் அளிப்பது தொடர்பாக கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில் ‘சுவிஸில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் குறிப்பிட்ட சில புகலிட கோரிக்கையாளர்களை உள்ளெடுக்க வேண்டும்.
இல்லையெனில், மாகாண அரசிற்கு 2,90,000 பிராங்க்( 4,24,73,826 இலங்கை ரூபாய்) கட்டணம் செலுத்த வேண்டும்’ என அரசு கூறியுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இக்கிராம மக்கள் ‘மாகாணத்திற்கு 2,90,000 பிராங்க் கட்டணம் செலுத்த தயார். ஆனால், புகலிட கோரிக்கையாளர்களுக்கு தஞ்சம் அளிக்க மாட்டோம்’ என அதிரடியாக கூறியுள்ளனர்.
சுமார் 10 புகலிட கோரிக்கையாளர்களை மட்டும் எடுக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை இக்கிராம மக்கள் நிராகரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில் இக்கிராம மக்கள் தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாகவும், புகலிட கோரிக்கையாளர்களுக்கு தஞ்சம் அளிக்க தயார் எனவும் அறிவித்துள்ளனர்.
உள்ளூர் நகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிறகு 5 பேர் அடங்கிய ஒரு கிறித்துவ குடும்பத்திற்கு புகலிடம் அளிக்க தயார் என அறிவித்துள்ளது.
மேலும், இந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை ஏற்பாடு செய்ய அங்கு வசிக்கும் 2,200 குடிமக்களை நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
