தமிழ்நாட்டின் தருமபுரியில் ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் வாழ பிடிக்கவில்லை என்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் இண்டூர் சின்னகனகம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவரது மகள் தர்ஷினி(11).
இவர் அதகபாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவர் நேற்று திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, வலியால் துடித்த தர்ஷினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தர்ஷினியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், உடல் முழுவதுமாக தீ பற்றியதில் தர்ஷினி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் பொலிசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பெற்றோர், ஆசிரியர், சக தோழிகளிடம் விசாரணை மேற் கொண்டதில் தர்ஷினி தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவ தினத்தன்று காலை பள்ளிக்குச் சென்ற தர்ஷினி யாருடனும் சரியாக பேசவில்லை எனவும், இனிமேல் பள்ளிக்கு வரமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், தான் வைத்திருந்த பேனா மற்றும் பென்சில் போன்ற பொருட்களை தனது நெருங்கிய தோழிகளிடம் கொடுத்துள்ளார்.
தோழிகள் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்ட பொழுது, என்னை இனிமேல் பார்க்க முடியாதல்லவா, அதனால் எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
பின்பு, பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த உடனே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டதாக தெரிகிறது.
துள்ளி விளையாடும் வயதில் தற்கொலை செய்து கொண்ட தர்ஷினி சடலத்தைப் பார்த்த பள்ளி தோழிகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது.