கிழக்கு மாகாணத்தில் அம்பாறையும் திருகோணமலையும் பறிபோன நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் தான் தமிழர்கள் கைகளில் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 72வீதம் தமிழர்கள் வாழ்ந்தாலும் இம்மாவட்டத்தின் ஆட்சி அதிகாரம், அனைத்தும் மட்டக்களப்பு மங்கள ராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா, அமீர்அலி போன்றவர்களின் கைகளிலேயே உள்ளன.
அவர்களின் கைபொம்மையாக அம்மாவட்டத்தின் நிர்வாக தலைமை அதிகாரியாக இருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எல்.எம்.சாள்ஸ் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு அண்மைக்காலத்தில் அங்கு நடைபெற்று வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்கள் கையாலாகாத நிலையிலேயே உள்ளனர்.
நீதித்துறையில் யாரும் தலையிட முடியாது, நீதிபதி வழங்கும் தீர்ப்பில் அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களோ தலையிட முடியாது என்பார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் அது தலைகீழாகவே உள்ளது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்காவுக்கு 2004ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி கொழும்பு உயர்நீதிமன்றம் இருவருட கடூழிய சிறைத்தண்டனையை வழங்கியது. பின்னர் மகிந்த ராசபக்ச ஆட்சிக்கு வந்ததும் அவர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையானார்.
மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நீதித்துறையில் அரசியல் தலையீடு மேலோங்கியிருந்தது.
மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் தீர்ப்பை மாற்றி எழுதுமாறு மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததும் அதற்கு நீதிபதி மறுத்ததால் நீதிபதியை அச்சுறுத்திய சம்பவமும் இடம்பெற்றிருந்தது. மன்னார் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து தாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
நீதிபதியை அச்சுறுத்தியவர்களுக்கு நீதிமன்றத்திற்கு கல் எறிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவே இல்லை.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபரை தன்கையில் போட்டுக்கொண்டு ஹிஸ்புல்லா அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வருகிறார் என்றும் சில நீதிமன்ற தீர்ப்புக்களில் கூட தலையிடுகிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற அதிகாரத்தை வைத்து அமைச்சர் ஹிஸ்புல்லா எவ்வாறு தமிழர்களின் காணிகளை அபகரித்து வந்தார் என்பதை நிரூபிக்கும் காணொளி ஒன்று கடந்த வருடத்தில் வெளியாகியிருந்தது.
அதேபோல தனக்கு சார்பாக தீர்ப்பை வழங்க கூடிய நீதிபதியை மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக நியமித்து எழுதடா தீர்ப்பை என நீதிபதியை கொண்டு தானே தீர்ப்பை எழுதுவித்ததாக பகிரங்க கூட்டம் ஒன்றில் அறிவித்திருக்கிறார்.
அமைச்சர் ஹிஸ்புல்லாவின் இந்த பேச்சுக்கள் நிர்வாக துறையிலும் நீதித்துறையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வாறு தலையீடு செய்கிறார் என்பதை நிரூபித்து நிற்கிறது.
நீதிமன்றத்தை அவமதித்து பேசிய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்காவுக்கு சிறைத்தண்டனை வழங்கியதை போல நீதித்துறையில் தலையீடு செய்து தீர்ப்பை மாற்றி எழுதி நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் சந்தேகமே.
சர்வாதிகார ஆட்சி புரிந்த மகிந்த ராசபக்சவை பதவியிலிருந்து நீக்கிய மக்கள் மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தனர். மைத்திரி அரசும் தனக்கு நல்லாட்சி என பெயர் சூட்டிக்கொண்டது.
ஆனால் மட்டக்களப்பில் மங்களாரமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அமிர்அலி, அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் ஆகியோர் புரியும் அட்டகாசங்கள் அடக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்களால் தொடர்ந்தும் மகிந்த ராசபக்சவின் சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறதோ என்ற சந்தேகமே எழுகிறது.
மட்டக்களப்பு வடமுனையில் 1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் திம்புலாகலயை சேர்ந்த பிக்கு ஒருவர் பொலனறுவை மாவட்டத்தில் இருந்த சிங்களவர்களை கொண்டு வந்து குடியேற்றினார். அக்காலப்பகுதியில் அமைச்சராக இருந்த கே.டபிள்யூ.தேவநாயகம் நேரடியாக சென்று அந்த சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்தினார். அப்போது டிக்சன் நிலவீர என்பவரே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தார். மிகவும் நேர்மையான அதிகாரி என மட்டக்களப்பு மாவட்ட மக்களால் பாராட்டப்பட்ட அவர் இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.
அதே போன்று மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள புன்னைக்குடாவிலும் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்ட போது அதனையும் அமைச்சர் தேவநாயகம் தடுத்து நிறுத்தினார்.
நீதி அமைச்சராக இருந்த போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அது நிறைவேறுவதற்கு துணைநின்றார் என்ற குற்றச்சாட்டு அமைச்சர் தேவநாயகம் மீது இருந்தாலும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திட்டமிட்ட குடியேற்றத்தை தடுக்க சென்ற அமைச்சர் தேவநாயகம் திம்புலாகல பிக்குவை தாக்கினார் என்று முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இன்று மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களான புனானை, கச்சைக்கொடி ஆகிய கிராமங்களில் சிங்கள குடியேற்றத்தை செய்யும் பிக்குவின் நடவடிக்கைகளை தடுக்கும் வல்லமை அற்றவர்களாகவே தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர்.
மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிக்கு நாங்களே கொண்டுவந்தோம் என பெருமை பேசும் தமிழ் அரசியல்வாதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமணரத்ன தேரர், ஹிஸ்புல்லா போன்றவர்கள் செய்யும் சட்டத்திற்கு முரணான சர்வாதிகார செயல்களை தடுப்பதற்கு நாதியற்றவர்களாகவே உள்ளனர்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கச்சைக்கொடி கிராமத்தில் பிரதேச செயலாளர், கிராம சேவை அலுவலர், காணி அதிகாரி ஆகியோருக்கு சுமணரத்ன தேரர் பொலிஸார் முன்னிலையில் கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.
தமது ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து கடமையை செய்வதற்கு இடையூறு விளைவித்தார் என பொலிஸாருக்கு முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய முழுப்பொறுப்பும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களையே சாரும். ஆனால் சுமணரத்ன தேரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க விளையும் அதிகாரிகளுக்கே தண்டனை வழங்கி வருகிறார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முதல் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் புகுந்து பிரதேச செயலாளரான பெண்ணை தாக்க முற்பட்ட சுமண ரத்ன தேரர் அங்கிருந்த ஆவணங்களையும் சேதப்படுத்தினார். இது தொடர்பாக சுமண ரத்ன தேரர் மீது எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் பட்டிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்தார்.
தனியார் ஒருவரின் காணியில் அத்துமீறி சிங்கள குடியேற்றங்களை செய்ய முற்பட்ட சுமணரத்ன தேரரின் செயலை தடுக்க சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மீது தேரருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அவரை அழைத்து வாக்கு மூலம் பெற்ற பொலிஸார் சுமணரத்ன தேரர் இதுவரை பல குற்றங்களை புரிந்த போதும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு சார்பாக மாவட்ட அரசாங்க அதிபர் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரமாக ஒவ்வொரு குற்றச்செயல்களை செய்த பின்பும் மாவட்ட செயலகத்திற்கு சென்று திருமதி சாள்ஸை சந்திக்க தவறுவதில்லை.
செங்கலடியில் தனியாருக்கு சொந்தமான காணிக்குள் குடியேற்றங்களை செய்யக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. நீதிமன்ற தடை உத்தரவை மீறியே சுமணரத்ன தேரர் அக்காணிக்குள் அத்துமீறி பிரவேசித்திருந்தார். நீதிமன்ற உத்தரவை மீறி அதனை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றத்திற்காக சுமணரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் குற்றத்தை புரிந்த சில மணி நேரத்தில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து விட்டு சென்றார்.
புன்னைக்குடா பகுதியில் தாம் முன்னர் இருந்ததாக விண்ணப்பித்த 62 சிங்கள குடும்பங்களுக்கு கல்குடா பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர் காணிகளை வழங்கியிருந்தார். தற்போது அதே குடும்பங்கள் புன்னைக்குடாவில் கடற்கரை பிரதேச காணிகள் தங்களுக்குரியது என அதனை அபகரிக்க முற்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட மாதவணை மற்றும் மயிலத்தமடு ஆகிய கிராமங்களில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் செய்யப்படுவதை கடந்த சில மாதங்களுக்கு முதல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
அங்கு 300 குடும்பங்கள் வரை குடியேறி இருந்ததுடன் அவர்களுக்கான வீடுகள் கட்டப்படுவதையும் விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததையும் நேரில் பார்த்தனர்.
அந்த சட்டவிரோத சிங்கள குடியேற்றம் வீட்டு திட்டமாக மாற்றப்பட்டிருந்தது. அதற்கு மாவட்ட அரசாங்க அதிபரும் அங்கீகாரம் வழங்கியிருந்தார்.
மிகவும் வனாந்தரக் காடுகளாக காணப்பட்ட இந்த எல்லைப்பகுதிக்குள் அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயா பிரதேசத்தில் இருந்து வருகைதந்துள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல நூறு ஏக்கர் காடுகளை அழித்து கடந்த மூன்று வருடகாலமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவதுடன் தற்போது குறித்த பகுதியில் கல்வீடுகள் மற்றும் களிமண் வீடுகள் என்பன அமைக்கப்பட்டு அந்த பகுதியில் பௌத்தவிகரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள கால்நடைகளுக்கான மேல்தரைக்கென ஒதுக்கப்பட்ட காணிகளிலேயே இச்சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
சட்டவிரோதமாக குடியேற்றப்பட்ட சிங்கள குடும்பங்களுக்கு ஹெலபிம என்ற சிங்கள அமைப்பு வீடுகளை கட்ட நிதி உதவிகளை வழங்கி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறும் மீள்குடியேற்ற உதவிகள் வீடமைப்பு திட்டங்களை வழங்குமாறு அதிகாரிகளை சுமணரத்ன தேரர் அச்சுறுத்தி வருகிறார்.
சுமணரத்ன தேரர் சிங்கள குடும்பங்களை மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் குடியேற்றி வருகிறார் என்பது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் கடந்த மே மாதம் 12ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் வெளியிட்ட அறிக்கையில் மட்டக்களப்பில் சிங்கள குடியேற்றம் என்பது பொய் என தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களை சுமணரத்ன தேரர் ஒரு புறம் அச்சுறுத்தி தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வருகிறார். மறுபுறம் அமைச்சர் ஹிஸ்புல்லா, அமைச்சர் அமீர்அலி போன்றோர் அதிகாரத்தை வைத்துக் கொண்டு அதிகார துஷ்பிரயோகங்களை செய்து வருகின்றனர்.
ஹிஸ்புல்லா அமீர்அலி போன்றவர்கள் தமிழ் பிரதேசங்களில் உள்ள காணிகளை அபகரிக்கும் வேலைகளை செய்து வருகிறார். அதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற பதவியை அவர்கள் பாவித்து வருகின்றனர். அவர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபரும் துணையாகவே இருப்பதாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசகாணிகளை கைப்பற்றுவதற்கு மாவட்ட அரசாங்க அதிபரை பயன்படுத்தும் இவர்கள் தமிழர்களின் தனியார் காணிகளை பணம் கொடுத்து வாங்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியகிழக்கு நாடுகளில் உள்ள உதவி நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் பெருந்தொகை நிதியை கொண்டு ஆரையம்பதி, கல்லடி நொச்சிமுனை போன்ற இடங்களில் உள்ள காணிகளை ஹிஸ்புல்லா கொள்வனவு செய்து வருகிறார்.
இதேபோன்று ஏறாவூர் நகரத்தை அண்டிய தமிழ் கிராமங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அரபுநாடுகளின் நிதி உதவியுடன் அலிசாகிர் மௌலான கொள்வனவு செய்து வருகிறார்.
ஓட்டமாவடியை அண்டிய தமிழ் கிராமங்கள் மற்றும் வாகரை பிரதேச செயலகப்பிரிவில் உள்ள தமிழ் கிராமங்களை அபகரிக்கும் வேலைகளை அமைச்சர் அமிர் அலி செய்து வருகிறார்.
இந்த காணி அபகரிப்புக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் உறுதுணையாக இருந்து வருகிறார்.
தாழங்குடா, வேடர் குடியிருப்பு, ஆரையம்பதி கிழக்கு ஆகிய கிராமங்கள் நூறுவீதம் தமிழர்கள் வாழும் பகுதியாகும். அங்குள்ள அரச காணிகளும் தனியார் தமிழருக்குரிய காணிகளும் சுவீகரிப்புச் செய்யப்பட்டு பின்பு அவை சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் குடியமர்த்தப்படுகின்றனர்.
மட்டக்களப்பு நகரே மாவட்டத்தின் பிரதான நகரமாகும். மட்டக்களப்பு நகரில் 99வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் மட்டக்களப்பு நகரில் 99வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லீம்களுக்கு சொந்தமானவையாகும்.
மட்டக்களப்பு நகரில் 1980களில் யாழ்ப்பாணத்தவர்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் இருந்தன. 1980களின் பின்னர் தமிழ் இயக்கங்களின் கப்ப தொல்லையால் யாழ்ப்பாண தமிழர்கள் முஸ்லீம் வர்த்தகர்களுக்கு விற்றுவிட்டு சென்றனர். அதன் பின்னர் 2004ல் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்த உடன் யாழ்ப்பாண வர்த்தர்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றினார். வெளியேறியவர்கள் தமது வர்த்தக நிலையங்களை முஸ்லீம்களுக்கு விற்றுவிட்டு சென்றனர். இப்போது மட்டக்களப்பு நகரின் வர்த்தகம் முழுமையாக முஸ்லீம்களிடம் கைகளுக்கு சென்று விட்டது.
இது முஸ்லீம்களின் தவறு அல்ல. அவர்களின் விவேகத்திற்கும் தூரநோக்கிற்கும் கிடைத்த வெற்றி, தவறு தமிழர்கள் பக்கம் தான். தூரநோக்கு சிந்தனை இன்றி தமது காணிகளை பறி கொடுத்து விட்டு மட்டக்களப்பின் வர்த்தகம் கைமாறி விட்டது, காணி பறிபோய் விட்டது என புலம்புவதில் எந்த பிரயோசனமும் இல்லை.
தமிழ் மக்களுக்கு குழி பறித்து கொண்டிருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் போன்ற உயர்அதிகாரிகளுக்கு வரவேற்பும் மாலை மரியாதையும் வழங்கி கொண்டிருந்தால் 72வீதமாக இருக்கும் தமிழர்கள் 25வீதமாக மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
-இரா.துரைரத்தினம்.