இந்தியாவைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு அங்கமாக 100 டொலர் நோட்டைத் தடை செய்யலாமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான நிபுணர் குழு குறித்த அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட ஒரு தொகைக்கு மேல் பணம் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனினும் இந்தச் செய்தியை அந்த நாட்டின் வருவாய் மற்றும் நிதி சேவைகள் அமைச்சர் Kelly O’Dwyer உறுதிப்படுத்த மறுத்துள்ளார்.
குறித்த இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்படும் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளைப்பொறுத்து அரசின் முடிவு அமையும் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை பிரான்ஸ் நாட்டில் 1000 யூரோக்களுக்கு மேல் பணம் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாது என்பது போன்ற நடைமுறையை அவுஸ்திரேலியாவும் பின்பற்றலாம் என குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம் அவுஸ்திரேலியா முழுவதும் 5 டொலர் நோட்டை விட மூன்று மடங்கு அதிகமாக 100 டொலர் நோட்டு புழக்கத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.