பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளில் 171 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆயிரத்து 600 முறைப்பாடுகள் கிடைத்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். டப்ளியூ. குணதாச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த முறைப்பாடுகளில் 165 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குரியவை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக அந்த முறையப்பாடுகளில் 45 முறைப்பாடுகளை வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிடைத்த முறைப்பாடுகளில் 357 முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 36 முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் முடிவடைந்த முறைப்பாடுகள் தொடர்பான 6 அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு களப்பு, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், பாதுகாப்பு அமைச்சின் காலம் கடந்த வெடிப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 6 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும் 6 அறிக்கைகள் ஜனாதிபதியிடம் எதிர்காலத்தில் கையளிக்கப்பட உள்ளன.