அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்க வவுனியா நகரப்பகுதியில் பிரதான வீதிகளில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய நெடுஞ்சாலை உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
வவுனியா நகரம் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பிரதான நகரமாகும்.
வடக்கிற்கான நுளைவு வாயிலாக காணப்படும் இந்த நகரினூடாக நாளாந்தம் பெருமளவிலான வாகனங்கள் பயணிக்கின்றன.
இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக முக்கிய சந்திகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன.
மேலும் இதனை கருத்தில் கொண்டு வவுனியா நகரில் காணப்படும் முக்கிய சந்திகளான மணிக்கூட்டுக்கோபுரச் சந்தி, வைத்தியசாலை சுற்றுவட்டம் மற்றும் கச்சேரி சுற்றுவட்டம் என்பவற்றில் வீதிபோக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.