மட்டக்களப்பு கடலில் வீழ்ந்தது யாருடைய விமானம்? எப்படி வீழ்ந்தது எதுவும் தெரியாத நிலையில் பாகங்கள்

250

நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் பார்வையும் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது என்றே கூறவேண்டும். இன்றைய தினம் கிழக்கு பகுதி கடலில் இருந்து மீட்கப்பட்ட விமானத்தின் பாகமே இதற்கு காரணம்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்றைய தினம் விமானத்தின் பெரிய பாகம் ஒன்று மீட்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் பலவும் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. அண்மைய காலமாக விமானங்கள் பல மர்மமான முறையில் காணாமல் போயிருந்த நிலையில் இந்த விமான பாகம் மீட்பு கவனிப்பை பெற்றுள்ளது.

குறிப்பாக, இலங்கைக்கு கிழக்காக உள்ள கடற்பற்பை அண்மித்த பகுதியில் சில விமானங்கள் காணமல் போயிருந்ததாக ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், மீட்கப்பட்ட விமான பாகம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக விபத்துக்குள்ளனதாக கூறப்படும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான விமானத்தின் பாகமாக இது இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சென்னையிலிருந்து அந்தமான் நோக்கி பயணித்த குறித்த விமானம், சில மணி நேரத்தில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

மேலும், குறித் விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

17 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல், 23 விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தது. எனினும், விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இன்று காலை மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான விமானத்தின் பாகமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2008 மற்றும் 2009 காலப் பகுதியில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட விமானமொன்று விடுதலைப் புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி கடலுக்குள் வீழ்ந்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே, அந்த விமானத்தின் பாகமாகவும் இது இருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பொருள், திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. மேலும், குறித்த விமான பாகம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE