எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கிய ட்ரம்பு..! ஏமாற்றமடைந்த ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு…!

239

2016ஆண்டு முடிவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்ற நிலையில், இந்த ஆண்டும் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த மற்றும் அதிகமாக மக்களிடத்தில் பேசப்பட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

இதில், அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, முக்கிய பிரபலங்களின் மறைவு என பல்வேறு விடயங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில விடயங்கள் இந்த ஆண்டு அதிகம் மக்களிடத்தில் தாக்கம் செலுத்தியிருந்தது.

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், பிடல் காஸ்ட்ரோவின் மறைவு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம், சிரியா உள்நாட்டு யுத்தம் என்பன மக்களிடத்தில் அதிக தாக்கத்தை செலுத்தியிருந்தது.

இவற்றோடு, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டமும் இந்த ஆண்டு மக்களிடத்தில் அதிக செல்வாக்கு செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்…

உலகின் மிக பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் 58வது ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெற்றது.

இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்குமிடையே கடும் போட்டி நிலவியது.

பலரும் ஹிலாரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தனை எதிர்பார்ப்புகளையும் பொய்யக்கி டொனால்ட் ட்ரம்பு வெற்றி பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவானார்.

வெறும் வர்த்தக பின்னணியை மாத்திரம் கொண்ட டொனால்ட் ட்ரம்பு, அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதியாக தெரிவானமை 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வாகும்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியமை…

சுமார் 43 ஆண்டுகளாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து செயற்பட்டு வந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியமை இந்த ஆண்டு இடம்பெற்ற ஒரு சரித்திர நிகழ்வாகும்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தீவிர பிரச்சரம் மேற்கொண்டு வந்த போதிலும், கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அந்த முயற்சி தோல்விகண்டது.

இதனையடுத்து, டேவிட் கெமரூன் தனது பதவியினை இராஜினாமா செய்தார். தொடர்ந்தும் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே பொறுப்பேற்றுக்கொண்டார். இது இந்த ஆண்டு இடம்பெற்ற மற்றுமொரு அரசியல் சார்ந்த முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது.

சிரியா உள்நாட்டு யுத்தம்…..

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தை ஏற்படுத்தியுள்ள ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு கடந்த காலங்களில் சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

எனினும், ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய ஆண்டாக 2016ஆம் ஆண்டு அமைந்துள்ளது. குறித்த அமைப்புக்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவளிக்கும் என எதிர்பார்ப்பட்ட நிலையில் அந்த எதிர்ப்பார்ப்பு பொய்யாகியது. இது அந்த அமைப்பிற்கு பெரும் ஏமாற்றமே.

இதன் காரணமாக ரஷ்யாவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காணரமாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அலெப்போ உள்ளிட்ட பகுதிகளை சிரிய அரசப்படை கைப்பற்றியது.

சிரியாவில் போர் உக்கிரமடைந்த நிலையில், அமைதியை ஏற்படுத்த ஐக்கியநாடுகள் சபை தொடர்சியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

எனினும், அலெப்போ பகுதியை கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டமை 2016ஆம் ஆண்டில் முக்கியமான விடயமாக பேசப்பட்டது.

கியூபாவின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மறைவு……

உலகின் பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவை தன் இறுதி மூச்சு வரை எதிர்த்து வந்த ஒரு மாபெரும் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ 2016ஆம் ஆண்டு மறைந்தார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக கியூபாவை ஆண்டு வந்த பிடல் காஸ்ட்ரோ அந்த நாட்டை சக்கரை கிண்ணமாக மாற்றிக்காட்டினார். அத்துடன், உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவால் விடுத்த ஒருவராகவும் இருந்துள்ளார்.

கம்யூனிச கொள்கையினை உலகில் ஓங்கி ஒலிக்க செய்த இந்த மாபெரும் தலைவர் கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி இந்த உலகை விட்டு மறைந்தார்.

அவரின் இழப்பு உலக அளவில் கம்யூனிசக் கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கு பேரிழப்பாக இருந்தது. இது 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 90வது பிறந்தநாள்……

2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற மற்றுமொரு சரித்திர முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வாக பிரித்தானிய மகாராணியின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டம் கருதப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தனது 90வது பிறந்தநாளை கொண்டாடிய அவர், பிரித்தானியாவில் நீண்ட காலமாக மகாராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமை பெற்றுக்கொண்டார்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தொடங்கிய இந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்திருந்த நிலையில் 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வாகவும் பேசப்பட்டுள்ளது.

SHARE