காந்திசிலை உடைப்பு விவகாரம் மாகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேயின் கொடிய செயல்

274

 

முல்லைத்தீவு காந்திசிலை உடைப்பு விவகாரம் கண்டிக்கத்தக்க செயல் -மாவை சேனாதிராசா

முல்லைத்தீவு நகர மத்தியில் மகாத்மா காந்திசிலை உடைக்கப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.இச்செயலானது மாகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும். இச்செயலை மக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
மகாத்மா காந்தி இந்திய போராட்ட காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து விடுதலையுணர்வூட்டியவர். மனிதகுல விடுத்தலைக்காகவும் இந்திய நாட்டின் விடுதலைக்காகவும் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அஹிம்சை வழியில் போராடிய உலகின் மிக வலிமை மிகுந்த போராட்ட தத்துவத்தை உருவாக்கிய உலகம் போற்றும் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டிருப்பதற்கு எனது கண்டனத்தை வெளிப்படுத்துகின்றேன்.எங்த ஒரு மானிடனும் இச்செயலை செய்திருக்கமுடியாது.இச்செயலுக்கு யாரும் எந்த காரணமும் கூறமுடியாது.இச்செயலானது மனித குலத்தின் ஒரு இழிவுச்செயலாகும் கொடுஞ்செயலாகும்.
இச்செயல் தொடர்பில் நானறிந்தது என்னவெனில்,முல்லை அரச அதிபர் கரைதுறைப்பற்று ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் 2016 மே மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கேட்டிருந்தார்.பண்டாரவன்னியன் ,வள்ளுவர்,பாரதியார்,மகாத்மா காந்தி முதலான எட்டு சிலைகள் அமைக்க 2016 வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தீர்மானமாகும்.
அத் தீர்மானத்தின் படி நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை உடைத்தமையின் உள்நோக்கமானது நிறைந்த மூடச்செயலாகும் என்பது வெளிப்படை. தமிழின விடுதலைப்போராட்டத்தில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மாக்களின் முன் அந்த விடுதலை வீர மண்ணில் இச்செயல் நடைபெற்றமையை பாரதி பாடியது போல் “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்”என்று கண்ணீர் விடத்தான் வேண்டும்.
எடுத்ததற்கெல்லாம் அறிக்கைப்போர் நடத்துபவர்கள் கூட இச்செயலை கண்டிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது மனதை நெருடுகின்றது.என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE