திமுகவின் செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினை செயல் தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருணாநிதியின் மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், இன்றைய திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படுவது உறுதி என கூறப்பட்டது.
சென்னையில் திமுக பொதுக்குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக பொதுச்செயலர் அன்பழகன் இப்பொதுக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
இக் கூட்டத்தில் முதலில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக திமுகவின் சட்டவிதி 18இல் திருத்தம் மேற்கொள்ள இன்றைய பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.
ஸ்டாலின் செயல் தலைவரானதை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.