சாலையோரம் மதிய உணவு சாப்பிட்ட விஜயகாந்த்!

188

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஈரோடு அருகே சாலையோரமாக நின்றபடி மதிய உணவு சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகராக இருந்து, தேமுதிக கட்சி தொடங்கி, தமிழக எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர் விஜயகாந்த். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக தலைமையிலான மக்கள்நலக்கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், சமீபகாலமாக, விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவந்தார்.

இந்நிலையில், தற்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, மதுரையில் அலங்காநல்லூரில் தேமுதிக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார்.

அதற்கு முன்பாக, ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா உடன் கலந்துகொண்டார். அதன்பின், அங்கிருந்து சென்னிமலை வழியாக, மதுரைக்கு காரில் சென்றார். மதியம் 2.30 மணியளவில் சென்னிமலை அடுத்த நொய்யல் ஆற்றின் கரையோரம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பசி எடுக்கவே, காரை சாலையோரமாக நிறுத்தச் சொல்லியுள்ளார் விஜயகாந்த்.

உடனடியாக, அங்கிருந்த தென்னை மர நிழலில் நின்றபடி, காரின் பானட் பகுதியில் வாழை இழை போட்டு, சாப்பாடு பரிமாறச் சொல்லி பிரேமலதாவை கட்டாயப்படுத்தியுள்ளார். தன்னுடன் வந்த தேமுதிக நிர்வாகிகளையும் அங்கேயே சாப்பிடும்படி விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைவரும் எந்த பாரபட்சமும் பார்க்காமல், அங்கேயே நின்றபடி, சாப்பிட தொடங்கியுள்ளனர். இதனை அவ்வழியே சென்று மக்கள் பலரும் ஆச்சரியமாகப் பார்த்துச் சென்றனர்.

 

SHARE