ஒருவரின் ஆளுமை, தகைமை, அனுபவம், சிறப்பியல்புகள் அடங்கிய பட்டோலையையே ‘CV’என அழைக்கிறோம்.
இப்போது நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் சிறப்பை, தகைமையை, ஆளுமையை வெளிப்படுத்தும் இரண்டு ‘CV’க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் இருவருமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள்தான். இதில் விசேட அம்சம் என்னவென்றால் அவர்களில் ஒருவரைத் தமது ஆளாக நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் தலைவரான இரா. சம்பந்தன். மற்றவரை நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா.
இந்த இரண்டு ‘சீவி’க்களிலும் ஒரு பொது அம்சம் புதையுண்டுள்ளது. அவர்கள் பகிரங்க மேடைக்கு – பொது வாழ்வுக்கு – வந்துவிட்டமையால் அவ்விடயம் ஆராயப்பட வேண்டியது மட்டுமல்ல, மக்களுக்கு மறைக்கப்படாமல் உரைக்கப்பட வேண்டியதுமாகும்.
சீ.வி.விக்கினேஸ்வரன்
C.V. விக்கினேஸ்வரன் இந்நிலைமைக்கு சம்பந்தனினால் வலிந்து இழுத்து வரப்பட்டவர். அதன் பின்னால் புதையுண்டுள்ள ‘இரகசியம்’ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
நீதித்துறையில் விக்கினேஸ்வரனுக்கு நல்ல பெயருண்டு என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பதவிகளில் இருந்து கொண்டு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு ஏதோ நியாயம் வழங்கிக் கிழித்துவிட்டவர் என்று கூறுவதற்கு ஏதும் இல்லை. பதவியில் இருக்கும் வரை அரசுக்கும், அரசமைப்புக்கும் முழு விசுவாசமாகச் செயற்பட்டு அதனால் கிடைத்த சுகபோக வசதிகளை அனுபவித்தவர்தான் அவர்.
சரி. அவர் தாம் சார்ந்த நீதித்துறைக்கு விசுவாசமாக நடந்து கொண்டார் என்று கூறியாவது அவரது கடந்த கால செயற்பாட்டை நாம் நியாயப்படுத்தலாம் என்று பார்த்தால் கூட, அங்கும் ஒரு விடயம் இடிக்கின்றது. அவர் விசுவாசமாக இருந்த நீதிதுறையால் கொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை அவர் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப் பதைத்தான் எவராலும் நியாயப்படுத்த முடியாது இருக்கிறது.
சீ.வி.கே.சிவஞானம்
அடுத்தவர் சீ.வி.கே.சிவஞானம். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தடவைகள் யாழ். தேர்தல் மாவட்ட மக்களால் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டவர்.
கேட்டால் ‘நான் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டேன்!’ – என்று வியாக்கியானம் பேசுவார்.
‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த இடமும் உருப்படாது’ – என்று ஒரு பேச்சு மொழி நம் மத்தியில் உள்ளது. சீ.வி.கே. சிவஞானத்தின் கதையும் அதுதான். அவர் புகுந்த எந்த இடமும் உருப்பட்டதாகவே சரித்திரம் இல்லை.
அவர் யாழ். மாநகர ஆணையாளரானார். அவ்வளவுதான். யாழ். நகரில் இருந்த மாநகர சபைக் கட்டடம் அழிந்து, சுவடே இல்லாமல் போய் நல்லூரில் தற்காலிகக் கொட்டகையில் மாநகரசபை இயங்கும் அவலம் உருவானது.
1978 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், விடுதலைப் புலிகளின் இணக்கத்தோடு வடக்கு, கிழக்குக்கு ஓர் இடைக்கால நிர்வாகத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்தது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு இணங்கினார். ஆனால் அந்த நிர்வாக சபைக்குத் தலைவராக அச்சமயத்தில் தீவிர ஐ. தே.க. விசுவாசியாகக் கருதப்பட்ட சீ.வி. கே. சிவஞானத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவித்தார். அவ்வளவு தான். இடைக்கால நிர்வாகமும் கந்தலாயிற்று.
ஐ.தே.க. ஆட்சிப் பீடத்துக்கும் சிவஞானத்துக்கும் இருந்த நெருக்கமான உறவு நிலைப்பாட்டை ஏலவே அறிந்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக அவரை ஜே.ஆர். அறிவித்த அன்றிரவே அவரை மிரட்டி அப்பதவியிலிருந்து அவர் விலகுகின்றார் என அறிவிக்கும் இராஜினாமாக் கடிதத்தையும் அவரிடமிருந்து வாங்கிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிவஞானத்தை தலைவராக நியமித்த ராசியோ என்னவோ இடைக்கால நிர்வாகம் முளையிலேயே கருகிவிட்டது.
பிரேமதாஸாவின் ஆள்
அதன் பின்னர் 1989 பொதுத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாகத் தெரிவுசெய்யப்பட்ட ஈரோஸின் ஒன்பது எம்.பிக்களும் 90 களின் முற்பகுதியில் யாழ்.குடாநாடு மீண்டும் புலிகளின் வசம் வீழ்ந்தமையை அடுத்து பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் விட, அந்த எம்.பி. பதவிகள் வெற்றிடமாகின. அந்த வேளையில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வரும் முயற்சியை லலித் அத்துலத்முதலி – காமினி திஸநாயக்கா அணி முன்னெடுத்தது. அதற்கு முன்னர் வரை உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த பிரேமதாஸாவுக்கு உள்ளூராட்சி சேவையிலிருந்த சீ.வி.கே.சிவஞானம் நெருக்கமானவராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்திருந்தார்.
பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்றவிசாரணைப் பிரேரணை கொண்டுவரப்பட்டதும் அதைப்பயன்படுத்தி ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ நகர்வை முன்னெடுத்தார் சிவஞானம்.
புலிகளைக் கையில் போட்டுக்கொண்டு ஈரோஸின் வசமுள்ள ஒன்பது எம்.பிக்கள் பதவியையும் தனது தலைமையில் கைப்பற் றிக் கொள்வது, அதன் பின் குற்றவிசாரணைப் பிரேரணையின்; போது தனது தலைமையில் சுயேச்சைக் குழுவின் 9 எம்.பிக்களையும் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து, ஜனாதிபதி பிரேமதாஸாவைக் கையில் போட்டுக்கொண்டு தான் ‘பெரிய ஆள்’ ஆவது.
இப்படி ஒரே சமயத்தில் புலிகளுக்கும், பிரேமதாஸாவுக்கும் கயிறுவிட சிவஞானம் எடுத்த முயற்சி அவர் அதற்குள் நுழைந்ததுமே வழமைபோல குழம்பிப் போயிற்று. வெற்றிடமாக இருக்கும் சுயேச்சைக் குழுவின் எம்.பி பதவியைப் பொறுப்பேற்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுப்பதற்காக சிவஞானம் கொழும்பு சென்றார். பிரேமதாஸாவைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அதற்கு இடையில் தனது வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, குற்றவிசாரணைப் பிரேரணை முயற்சியை பிரேமதாஸா முறியடித்தமையால் சிவஞானத்தால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கிடையில் சிவஞானம் – பிரேமதாஸா கூட்டுறவின் சூட்சுமங்களைப் பற்றி அறிந்து கொண்ட புலிகள் அச்சமயம் சிவஞானம் மேற்கொண்ட எம்.பியாகும் முயற்சிக்கும் ஆப்பு வைத்துவிட்டனர்.
1990 தொடக்கம் 2013 வரை கால்நூற்றாண்டு காலமாக முதலில் பின் கதவாலும் பின்னர் தேர்தல்கள் மூலமாகவும் எம்.பியாகும் நோக்கோடு சிவஞானம் முன்னெடுத்த பேராசை முயற்சி இப்படிக் கனவாகிப் போனமைதான் வரலாறு.
‘முரசொலி’க்கு மூடுவிழா நடத்திய சிவஞானம்
அதற்குப் பின்னர் ‘முரசொலி’ பத்திரிகையின் நிர்வாகியாக சிவஞானம் அதற்குள்ளே நுழைந்தார். அதுவரை பல ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி வந்த ‘முரசொலி’, சிவஞானம் உள்ளே நுழைந்த சில மாதங்களில் மூடுவிழா நடத்தவேண்டிய இராசிக்கு உள்ளாயிற்று.
அடுத்தடுத்து மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற சிவஞானத்துக்கு மீண்டும் இம்முறை மாகாண சபைத் தேர்தலிலும் இடம்கொடுப்பதற்கு ஒரே பிடியாக நின்றவர் மாவை சேனாதிராஜா.
மக்கள் தலையில் காலம் காலமாக பூச்சுத்திவிட்டு வட மாகாண சபை முதலமைச்சர் கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் வித்தியாதரன், சிறை சென்ற மாணவர் பிரதிநிதி தர்ஷானந்த் போன்றோரையெல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு சிவஞானத்துக்கு இடம் கொடுப்பதற்கு மாவை விடாப்பிடியாக நின்றமைக்குக் காரணம் உண்டு.
மாவை ஆங்கிலத்தில் ‘வீக்’. அவருக்கான ஆங்கிலக் கடிதங்கள், ஆவணங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் எடுபிடி சிவஞானம்தான். இன்றைய நிலையில் மாவை விசுவாசியாகக் காட்டிக் கொள்வதன் மூலமாவது கட்சிக்குள் தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதுதான் சிவஞானத்தின் பரிதாப நிலை.
அந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் தெரிவுக்கும் முந்திக்கொண்டு மாவையின் பெயரை முன்மொழிந்து பிரகனடப்படுத்தினார் சிவஞானம். அவரின் அந்த நடவடிக்கையின் விளைவாக இறுதியில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பெரும் களேபரம், குழப்பம் எற்பட்டதுதான் மிச்சம். ஆனால் அப்படி மாவையை தூக்கிப் பிடித்தமைக்குப் பரிசாகவே – வெகுமதியாகவே – ஏனைய பல பிரபல முகங்களை எல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு, தோல்விப் பல்லவியையே பாடுகின்ற சிவஞானத்தை வேட்பாளராக்கினார் மாவை.
தன்னுடைய இந்த நடவடிக்கையை நியாப்படுத்துவதற்காக மாவை எல்லோரிடமும் ஒரு காரணமும் கூறி வருகின்றார்.
‘முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாகாண சபையில் நானும் இல்லை. சம்பந்தர் ஐயா மட்டத்திலும் யாரும் இல்லை. ஆகவே கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவர் இருக்கவேண்டியது அவசியம். அதனால்தான் சிவஞானத்தை நிறுத்தியுள்ளோம்.’ – என்பது தான் மாவை கூறும் சளாப்பல் நியாயம்.
சிவஞானம் இம்முறையாவது வென்று மாகாண சபை உறுப்பினராவாரா அல்லது நான்காவது முறையும் தோற்ற பின்னர், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் யாழ்.மாநகர சபைத் தேர்தலிலும் ஐந்தாவது தடவையாக மாவையினால் களமிறக்கப்படுவாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அதற்குப் பொறுதிருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால் தாம் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்று சிவஞானம் கூறுவதும் அதை மாவை அங்கீகரிப்பதும் சுத்தப் பொய் என்பதுதான் உண்மை.
உள்ளூராட்சி சேவையிலிருந்த காலம் முதல் ஆளும் ஐ.தே.கட்சி விசுவாசியாகவே செயப்பட்டவர் சிவஞானம். பின்னர், பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ‘சீட்’ கிடைக்காமல் வேட்பாளர் நியமனத்துக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஒண்டியவர் அவர். அக்கட்சியின் உபதலைவராகவும் செயற்பட்டவர். எப்போதும் நான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூக்கு விசுவாசமாகச் செயற்படுவேன் என்று சத்தியமிட்டு சிவஞானம் எழுதிய கடிதம் இன்றும் திருமதி குமார் பொன்னம்பலம் வசம் முக்கிய ஆவணமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இப்படி அடிக்கடி கட்சி, அணி மாறிய பச்சோந்தியைத்தான் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் மூத்த – சிரேஷ்ட – உறுப்பினர் என்று கூறி கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் காதிலும் பூச்சுற்றி வருகின்றார்.
ஆமை,அமீனா கதையைப் புரிந்து கொண்டதால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட பல மாதக் கணக்கில் இருட்ட றையில் தாம் சிறை வைத்திருந்த சிவஞானத்தை தம்முடன் அவரை வைத்திருப்பது தங்களுக்குக் கெடுதல் என்று கருதி விடுவித்தார்களோ தெரியாது.
இரண்டு ‘சீ.வி’க்களிலும் பொதிந்து கிடக்கும் பொதுமை
சரி. இனி விடயத்துக்கு வருவோம்.
இந்த இரண்டு ‘சீவி’க்களிலும் அப்படி என்ன பொதுமை பொதிந்து கிடக்கின்றது?
நீதிமன்றத்தினால் ‘காமுகன்’ என்று வர்ணிக்கப்பட்டு, பதின்மூன்றுக்கும் அதிகமான சிறுமியரை பாலியல் கொடூரத்துக்கு உள்ளாக்கி, ஓர் உதவியாளரைப் படுகொலை செய்த குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுவாமி பிரேமானந்தவை தங்களின் குருவாக இவர்கள் இருவரும் ஏற்றித் துதித்துப் போற்றி வணங்குகின்றார்கள் என்பதுதான் அந்தப் பொதுமை.
சுவாமி பிரேமானந்தா இலங்கை மாத்தளையைச் சேர்ந்தவர். 1951 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த அவரின் பெயர் பிறேம்குமார். சித்து வேலைகள் கைவரப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி 1972 இல் மாத்தளையில் ஓர் ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.
1983 இனக் கலவரத்தை அடுத்து, ஆசிரமத்தில் இருந்த ஒரு டசின் அநாதைக் குழந்தைகளையும், சில விசுவாசி களையும் அழைத்துக் கொண்டு அகதிப் படகில் தமிழகம் சென்ற பிரேமானந்தா, 1989 இல் திருச்சியில் ‘பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்’ என்ற பெயரில் புதிய ஆச்சிரமத்தைத் தொடங்கினார். வாயிலிருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதியசமாகச் செய்து காட்டுவதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது. அதனால் ஆசிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. சொத்துகள் சேர ஆரம்பித்தன. திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஆசிரமம் விசாலமாயிற்று. சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.
பிரேமானந்த லீலைகள்
1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கிய போதுதான் நிலைமை விபரீதமாயிற்று.
சில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து பொலிஸில் கொடுத்த புகார்களை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பமாயிற்று. அப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை வைத்துத் தமது உடற்பசியைத் தீர்த்த சுவாமியின் அடாவடித்தனங்கள், பித்தலாட்டங்கள் அம்பலமாயின.
அந்த காலகட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.
நீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக்குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.
சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
பாலியல் வன்புணர்வைத் தாங்கமுடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார். சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை.
நீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் தனது 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார்.
காமுக சுவாமியின் பக்தர்களே இருவரும்
சரி. இந்த பிரேமானந்தா சுவாமிக்கும் இந்த இரண்டு சீ.விக்களுக்கும் என்ன தொடர்பு….?
இந்த இருவருமே அந்த காமுக சுவாமியின் சிஷ்யர்கள் – விசுவாசிகள் – என்பதுதான் முக்கிய அம்சம்.
முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் எந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்க முன்னரும் ‘குரு பிரம்மா…. குரு தேவா…’ என்ற சுலோகத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பிப்பார். அவர் குரு என்று போற்றுவது இந்த சுவாமி பிரேமானந்தாவைத்தான்.
இன்றும் சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு வீட்டுக்குச் செல்பவர்கள் அவரது ஹோலில் சுவாமி பிரேமானந்தாவின் படம் தொங்கவிடப்பட்டு மலர்மாலை சாத்தி வணங்கப்படுவதை அவதானிக்கலாம்.
தமிழகம் செல்லும் காலம் எல்லாம் விக்னேஸ்வரன் திருச்சிக்கு செல்லத் தவறுவதில்லை. சிறையில் இருந்த சுவாமி பிரேமானந்தாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வருடாந்த வழக்கமாகவே கைக்கொண்டுவந்தார்.
இந்திய செஷன்ஸ் நீதிமன்றத்தினாலும், பின்னர் உயர்நீதிமன்றத்தினாலும் பாலியல் வன்புணர்வுக் கொடூரங் களுக்காகவும், அடித்துப் படுகொலை செய்த குற்றத்துக்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டில் அது உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அந்தக் குற்றவாளியைக் கடவுளாவும் குருவாகவும் தரிசித்து வணங்கிவரும் ஒருவரின் கைகளில்தான் வடக்கு மாகாண சபை நிர்வாகம் போகப்போகின்றது.
எங்கோ இலங்கை அரசுக்குப் ‘பந்தம்’ பிடிக்கும் அரசுப்பணியில் இருந்த சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு இந்த முதலமைச்சர் வேட்பாளர் என்ற அதிர்ஷ்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது சுவாமி பிரேமானந்தாவின் அருள்தானோ என்பதும் தெரியவில்லை.
திருகோணமலை ஆதிபத்ர காளியை வணங்கும் சம்பந்தனின் கனவில் தோன்றி சீ.வி.விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும்படி அருளாசி வழங்கியவரும் இந்த காமுக சுவாமிதானோ தெரியவில்லை.
சீ.வி.கே. சிவஞானமும் இந்த சுவாமியின் பக்தர்தான். 1980 களின் முற்பகுதியில் சிவஞானம் யாழ்.மாநகர சபை அலுவலகத்துக்குள் வைத்து புலிகளால் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார். அச்சமயம் கொழும்புப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சிவஞானம் ‘சுவாமி பிரேமானந்தாவே எனது உயிரைக் காப்பாற்றியவர்’ என்று கூறத் தவறவில்லை. பிரேமானந்தாவைப் போற்றிப் புகழ்ந்து சீ.வி.கே.சிவஞானம் வரைந்த ஒரு பக்கக் கட்டுரை எண்பதுகளின் முற்பகுதியில் கொழும்புப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது.
கடைசியாக வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கூட தாமும் சீ.வி.விக்கினேஸ்வரனும் சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் தாம் என்பதை சாடைமாடையாகக் குறிப்பிட சிவஞானம் தவறவில்லை.
‘எனக்கும் ( சிவஞானத்துக்கும் ) முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏதும் கருத்து வேறுபாடு உள்ளது என்று யாரும் கருதிவிடக் கூடாது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஆச்சிரமத்தின் பக்தர்கள்தான்’ – என்று சிவஞானம் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
ஆக காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது என்பதுதான் இன்றைய அவல நிலை.
தந்தை செல்வா கூறியமைபோல தமிழினத்தைக் கடவுள் வந்துதான் காப்பாறவேண்டும் என்பது உண்மை.
ஆனால் அந்தக் கடவுள் சுவாமி பிரேமானந்தா போன்றோரின் வடிவத்தில் வருவார் என்பதுதான் தமிழர்களின் துர்ப்பாக்கியம்….!
ஆருடன்!