வவுனியாவில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் படத்தை எரிப்பதற்கு தூண்டியவர்கள் தான் வவுனியாவில் சிலர் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தார்கள் என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் நேற்று(03) பிற்பகல் 35 விவசாயிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்த மக்களைத் தூண்டி விட்டவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தான் இருக்கின்றார்கள். எங்களுடைய வீட்டை வைத்துக் கொண்டுதான் வாக்கு கேட்டு வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனாலும், கூட இருந்து குழி பறிக்கின்றார்கள். இது அவர்களுக்கு பழக்க தோசம், கூட இருந்தவர்களையே படுகொலை செய்தவர்கள் அவர்கள்.
அவர்கள் சொல்லியதன் காரணமாகத்தான் அந்த ஆர்ப்பாட்டம் வவுனியாவில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளியில் ஒரு பெண் எதிர்க் கட்சித் தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றார்.
ஒரு தமிழன், ஒரு தமிழச்சி அவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு எங்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கும் அந்த தலைவரை அந்த பெண் அப்படிச் சொல்லுகின்றார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயத்தை ஐக்கிய நாடுகளுக்குச் சென்று அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குரிய நிலையம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை உருவாக்கிக் கொடுப்பதற்கு முக்கியமாக பங்களித்தவர் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் ஆவார்.
அவ்வாறு இருக்கும் போது ஒரு விதமான அடிப்படையும் இல்லாது தூண்டப்பட்டு, ஆர்ப்பாட்டம் செய்து காணாமல் ஆக்கப்பட்டதற்கு பதில் சொல்ல வேண்டும் என கூறியிருக்கின்றார்கள்.
இவ்வாறான பிரச்சினைகள் எமது பிரதேசங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.