I.L.O நிறுவனத்தின் நிதி உதவியுடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சினூடாக நுண்கடன் திட்டம்

109
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கூட்டுறவுத் துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சும் I.L.O நிறுவனமும் இணைந்து குறைந்த வட்டியிலாலான நுண்கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வியாழக்கிழமை வடமாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
  
  
  
யுத்தத்தால் பெரிதும் நலிவடைந்துள்ள கூட்டுறவுத் துறையை குறிப்பாக கூட்டுறவாளர்களை மீள் கட்டியெழுப்புவதற்காகவும் மற்றும் கிராமங்களின் சகல வேலைத்திட்டங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்குடனும் இவ் அமைச்சுக்கு குறித்த நிறுவனம் 300மில்லியன் ரூபாவினை கடனாக வழங்கியுள்ளது. இத் திட்டத்தின் மூலம் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் போராளிகள் அடங்கலாக சுமார் 1250 குடும்பங்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் அமைச்சர் அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கையில், தனியார் நுண் கடன் திட்டங்களின் அதிகளவான வட்டியின் காரணமாக பலர் ஏமாற்றப்படுகின்றனர். பலர் தற்கொலை செய்து கொள்வதற்குக் கூட இத்திட்டங்களே மூல காரணமாக அமைகின்றன. இது தொடர்பாக மகளிர் விவகார அமைச்சின் 2வது ஆலோசனைக் கூட்டத்திலும் இவ் விடயம் தொடர்பாக ஆராய்ந்திருந்தோம். நுண் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள், குடும்பங்களில் உள்ள பெண்களை இலக்கு வைத்து கடன் பொறிக்குள் சிக்கவைத்து வரும் போக்கு தொடர்ந்து வருகிறது. இக் கடன் பொறிக்குள் இருந்து எமது மக்களை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இக் கடன் திட்டத்திற்காக இப் பிரதேசத்தை தெரிவு செய்ததற்கான காரணம் இப் பகுதி யுத்தத்தினால் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக மிகச் சிறப்பாக இயங்கிய கூட்டுறவுத்துறை மிகவும் நலிவவடைந்துள்ளது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே இப் பகுதி இத் திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி எதிர்காலத்தில் இப் பகுதியில் கடன் திட்டத்தை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக  கூட்டுறவு வங்கி ஒன்றும் இப் பகுதியில் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு கைவேலி பாடசாலை முன்றலில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், I.L.O நிறுவன உத்தியோகத்தர்கள், பெண்கள் சுயமுயற்சி கூட்டுறவுச் சங்க தலைவி, கூட்டுறவுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

SHARE