
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி ஆகியோருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தடையில்லாச் சான்று (என்ஓசி) வழங்காது எனத் தெரிவதால், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் அவர்கள் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக, தேசிய அணிக்கான மத்திய ஒப்பந்தத்திலிருந்து விலக அவர்கள் விருப்பம் தெரிவித்ததை அடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்கான பிரத்யேக குழு ஒன்றை ஆப்கானிஸ்தான் வாரியம் அமைத்துள்ளது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடுவது, தேசிய பணியாகும். ஆனால், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி ஆகிய மூவரும் தேசிய அணியில் விளையாடுவதற்கு பதிலாக, தனிப்பட்ட லாபத்துக்காக வர்த்தக ரீதியிலான லீக் போட்டிகளில் விளையாட விரும்புகின்றனர். அதன்பேரில் ஆப்கானிஸ்தான் வாரியத்துடனான மத்திய ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கின்றனர்.
ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய ஒப்பந்தத்தில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள நினைப்பதால், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரித்து, தகுந்த பரிந்துரைகளை வாரியத்தின் தலைமைக்கு வழங்கும் வகையில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் வாரியத்தின் புதிய மத்திய ஒப்பந்தத்திற்கு அவர்கள் தகுதியற்றவர்களாகின்றனர். அவர்களுக்கான தடையில்லாச் சான்று உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. வரும் நாள்களில் போட்டிகளின்போது தேசிய அணியில் அவர்கள் பங்கேற்பது தொடர்பாக, தேவையின் அடிப்படையில் வாரியம் முடிவெடுக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் எதிர்வரும் சீசனுக்கான ஏலத்தில் முஜீப் உர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸால் வாங்கப்பட்டார். நவீன் உல் ஹக்கை லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸூம், ஃபஸல்ஹக் ஃபரூக்கியை சன்ரைசர்ஸ் ஹைதராபாதும் தக்கவைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, வரும் ஜனவரியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 11, 14, 17 திகதிகளில் முறையே மொஹாலி, இந்தூர், பெங்களூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.