Tamil Cultural Broadcasting (TCB) செய்தி வாசிப்பாளர் ஹரிணி உள்பட எழுவர் துபாய் தடுப்பிலிருந்து பிரேசில் பயணம்.

379

ஈழத்து உறவுகளுடன் புகழிடம் தேடி இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா நோக்கி சென்றவேளை படகில் ஏற்பட்ட பாதிப்பால் குறித்த படகு கடலில் மூழ்கும் அபாயநிலை ஏற்பட்டு தத்தளித்தபோது, அவுஸ்திரேலிய அரசு துரிதமாக செயல்பட்டு பிலிப்பெயின்ஸ் நாட்டு கப்பலில் அவர்களை ஏற்றி துபாய் அரசிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தது.

அப்படகில் பயணித்திருந்த அகதிகள் அனைவருக்கும், அகதிகளுக்கான ஐ.நாவின் தொண்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் ஒவ்வொரு நாட்டில் அடைக்கலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் மீதமாகவிருந்த எழுவரும் துபாய் அரசின் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீதமாகவிருந்த ஏழு பேருக்கும் இன்று (11.11.2014) பிரேசில் நாடு புகழிடம் வழங்கி அவர்களை அரவணைத்து கொள்கின்றது.

அந்தப்புகழிட கோரிக்கையாளர்களில் ஈழத்து ஊடகவியலாளர்களில் ஒருவரான “தமிழ் கலாசார ஒளிபரப்பு” Tamil Cultural Broadcasting (TCB) செய்தி வாசிப்பாளர் ஹரிணியும்  உள்ளடங்குகின்றார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப போவதாக ஐ.நா அறிவித்தவேளை, அந்த ஈழத்து உறவுகளுக்காக மின்னியல் மற்றும் அச்சு ஊடகங்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள், மனிதநேய ஆர்வலர்கள், மதப்பிரமுகர்கள் தங்களின் உணர்வுகளையும் பிரார்த்தனைகளையும் ஆசீர்வாதங்களையும் அன்புடனும், அர்ப்பணிப்புடனும் வழங்கியதால் இன்று அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு மலர்ந்தது.

ஒவ்வொரு அன்பான உள்ளங்களுக்கும் உணர்வுபூர்வமான நன்றிகளுடன் அந்த ஈழத்து உறவுகள் இன்று விடியலைத்தேடி பயணிக்கின்றன. அந்த உறவுகள் மரணத்தின் பிடியில் இருந்தவேளை தங்களின் உயிர் காத்தவர்களுக்கும் உரிமையை காத்தவர்களுக்கும் ஊடகங்களின் ஊடாக தங்களின் நன்றிகளை சொல்வதில் ஆனந்தம் கண்டு உங்களின் அன்பில் கலந்து கொள்கின்றனர்.

SHARE