ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையகத்தின் 30வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக இலங்கையின் அனுசரணையுடன் கொணடுவரப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு எதிரான விசாரணை பொறிமுறை தொடர்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தமது கட்சியின் ஆலோசனைகளை இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் விபரம் பூரணமாக…
ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையகத்தின் 30வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக இலங்கையின் அனுசரணையுடன் கொணடுவரப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு எதிரான விசாரணை பொறிமுறை தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்வைக்கும் ஆலோசனைகள்…
பிரத்தியேக நீதிமன்றம் தொடர்பாக
1. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்திற்கிணங்க இலங்கை அரசால் அமைக்கப்படவிருக்கும் பிரத்தியேக நீதிமன்றமானது சர்வதேச நீதிபதிகளையும் சர்வதேச வழக்குதொடுனர்களையும், சர்வதேச விசாரணையாளர்களையும், சர்வதேச வழக்குறைஞர்களையும் கொண்டதாக அமையவேண்டும்.
1.அ. இந்த பிரத்தியேக நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் பெரும்பான்மையான நீதிபதிகளுமாக சர்வதேச நீதிபதிகளை இணைப்பதன் மூலமே இது நம்பகத்தன்மை வாய்ந்த நீதிமன்றமாக அமையமுடியும்.
1.ஆ. வழக்குத் தொடுநர்களும் விசாரணையாளர்களும் பக்கச்சார்பற்ற வெளிநாட்டவர்களாக இருப்பதனூடாக இந்த நீதிமன்றம் மேலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமையும்.
2. சாட்சிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டிய விடயங்கள்
2.அ. சாட்சியங்களைப் பொறுத்தவரையில், மிகப்பெரும்பான்மையான சாட்சிகள் வடக்கு-கிழக்கில் இருப்பதின் காரணமாக இந்த சாட்சிகள் சாட்சியமளிப்பதற்கான அச்சமற்ற ஒரு புறச்சூழல் உருவாக்கப்படவேண்டும். அத்துடன் சாட்சிகளுக்கான பாதுகாப்பு என்பதும் உறுதிப்படுத்தப்படவேண்டும். அச்சமற்ற புறச்சூழலை உருவாக்குவதாக இருந்தால் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் மிகப் பிரமாண்டமான இராணுவ ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குள் கொண்டுவரப்படக்கூடியதொரு சூழல் உருவாக்கப்படவேண்டும். சாட்சிகள் துணிந்து முன்வந்து சாட்சியமளிப்பதற்கு இவ்வாறான அச்சமற்ற சூழல் உருவாக்கப்படுவது மிகவும் அவசியம்.
2.ஆ. ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் 2015 செப்ரெம்பரில் வெளியிட்ட விசாரணை அறிக்கைக்கான சாட்சியங்களில் மிகப்பெரும்பகுதியை அவர்கள் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியிலிருந்தும் இன்னும் பல்வேறுபட்ட சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்கள் என்பதும் ஏறத்தாழ 3000க்கும் மேற்பட்டோர் இவ்வாறு சாட்சியமளித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, இலங்கை அரசாங்கம் உருவாக்க இருக்கும் பிரத்தியேக நீதிமன்றத்தில் அவர்கள் சாட்சியமளிக்க வேண்டுமாக இருந்தால், இலங்கைக்குள் வந்து அவர்கள் சாட்சியமளிப்பதென்பது கடினமான காரியமாகும். எனவே, இங்கு உருவாக்கப்படும் நீதிமன்றத்தின் ஒரு கிளை அமைப்பொன்றை ஐரோப்பாவிலும் அமெரி;க்காவிலும் அமைப்பதனூடாகவே அங்குள்ளவர்களின் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
2.இ. சாட்சியமளிக்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் வகையிலும், அவர்களது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தினுடைய அலுவலகங்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவேண்டும்.
3. இலங்கை அரசாங்கம் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடாத்தும் பொருட்டு சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், முன்திகதி இடப்பட்டவாறான புதிய சட்டமூலங்களை உருவாக்க வேண்டும்.
4. அமைக்கப்படவிருக்கும் நீதிமன்றமானது போர்க்குற்றங்களை மாத்திரமல்லாமல், யுத்தம் உருவானதற்கான காரணங்கள், யுத்தத்தினால் ஏற்பட்ட மனித மற்றும் சொத்திழப்புக்கள் போன்றவற்றை தீர்க்கமாக ஆராய்வதோடு இவை மீண்டும் ஏற்படாதவாறு தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
5. கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு, சரணடைந்து, காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தெளிவான பதிலை இந்நீதிமன்றத்தினூடாக வெளிக்கொணர வேண்டும்.
நட்டஈடு வழங்குதல்
5.அ. யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள், சொத்துக்களை இழந்தவர்கள் அனைவருக்கும் சர்வதேச தரத்திலான நட்ட ஈடுகள் வழங்கப்படவேண்டும்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை
6. இலங்கையில் மிகநீண்டகாலமாக இருந்துவரும் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதனூடாகவே இனங்களுக்கிடையில், புரிந்துணர்வையும் நல்லெண்ணெத்தையும் ஏற்படுத்தமுடியும். அந்த வகையில், தமிழ் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்குமுகமாக அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் காத்திரமான பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்பதுடன், இந்த பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றும் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், இந்த பேச்சுவார்த்தையைக் கண்காணிப்பதற்கு சர்வதேசத்தின் உதவிகளையும் நாடவேண்டும்.
6.அ. இத்தகைய காத்திரமான பேச்சுவார்த்தையினூடாக இணக்கப்பாடுகளும் தீர்வும் எட்டியதன் பின்னரே புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய அரசியல் சாசனத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளும் தீர்வுகளும் சரியான முறையில் உள்ளடக்கப்படவேண்டும்.
6.ஆ. இவ்வாறான விடயங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடைமுடைப்படுத்து வதற்காக ஐ.நா. தலைமையிலான குழுவொன்று அமைக்கப்பட்டு இத்தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதம் வழங்கப்படவேண்டும்.
அரசியல் கைதிகளின் விடுதலை
7. யுத்தத்திற்கு முன்பும் பின்னரும் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறைச்சாலையில் கைதிகளாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் ஒரு பொதுவான மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.
மீள்குடியேற்றம்
8. ஐ.நா. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் இடம்பெயர்ந்த மக்கள் தத்தமது காணிகளில் குடியேறும்பொருட்டு அவர்களது காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்படவேண்டும்.
8.அ. மிக நீண்டகாலமாக அரச காணிகளிலும், தனியார் காணிகளிலும் இருந்துவரும் ஆயிரக்கணக்கானோர் தமது காணிகளுக்கான உரித்தைக் கொண்டவர்களாக இல்லை. மாகாணசபை நிர்வாகிகளை உள்ளடக்கியதாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இத்தகைய காணிகள் காணிகளின் உரித்துக்கள் அவர்களுக்குக் கிடைப்பதற்கு ஆவன செய்யவேண்டும்.
தீர்வுத்திட்டம்
9. இலங்கை ஒரு பல்லின பல்மொழி, பலமதங்களைக் கொண்ட ஒரு நாடாக இருப்பதால் ஒரு தீர்வுத் திட்டம் என்பது ஒரு சமஷ்டி அரசியலமைப்பு முறையிலான அதிகார பகிர்ந்தளிப்பு ஒன்றினூடாகவே மேற்கொள்ளப்படவேண்டும்.
இந்த அதிகாரப் பகிர்ந்தளிப்பு என்பது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய வடக்கு-கிழக்கை ஒரு தனியான அலகாகக் கொண்டு தமிழ் மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய அடிப்படையிலும் அவர்களுக்கு உரித்தான பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையிலும் முழுமையான அதிகாரப் பங்கீடு ஏற்படுத்தப்படவேண்டும். இவற்றின் அடிப்படையில், வடக்கு-கிழக்கில் ஒரு சுயாட்சி அரசொன்று நிறுவப்படுதல் வேண்டும்.